கொரோனா கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த அதிபர் டிரம்ப்; கருத்துக்கணிப்பு மக்கள் தகவல்

அமெரிக்காவில் கொரோனா தொற்றை கையாளுவதில் அதிபர் ட்ரம்ப் தோற்று விட்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது

கொரோனா தொற்றினால் அமெரிக்கா பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது.

வேலை இழப்புகள், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றாலும் அமெரிக்கா திணறி வருகிறது. கொரோனா தொற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளில் அதிபர் ட்ரம்ப் சரியாக செயல்படவில்லை என்றும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகரித்தது என்றும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் அதிபர் ட்ரம்ப் தொற்றை முறையாகக் கையாளவில்லை என கருதுகின்றனர். சுமார் 730 பேரிடம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 66 சதவீதம் பேர் கொரோனாவை கையாள்வதில் அதிபர் டிரம்ப் தோற்றுவிட்டதாக தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று கருப்பின வாலிபர் ஜார்ஜ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தையும் அதிபர் சரியாக கையாளவில்லை என்று மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இனவெறிக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டத்தை தடுக்க முக்கிய நகரங்களில் அதிபர் ட்ரம்ப் போலீஸ் படையை நிறுத்தியது அத்தகைய சூழலை மேலும் மோசமடைய செய்தது என்று 52 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதனிடையே கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமான கலிபோர்னியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.