ரஷ்ய எல்லைகளை பலப்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவு

ரஷ்யா: ஜனாதிபதி புடின் உத்தரவு... உக்ரைனில் இருந்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளையும் சேர்த்து, ரஷ்ய எல்லைகளை பலப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன் ரஷ்யா தன்னுடன் இணைத்து கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கு உக்ரைன் மற்றும் உலக நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்த நிலையில், ரஷ்யாவின் அங்கமாக அறிவித்த பகுதிகளை மீட்டெடுக்கும் பணியில் உக்ரைனிய படைகள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் முலோபாய நகரான கெர்சனை ரஷ்ய படைகளிடம் இருந்த உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளனர்.

ரஷ்யாவின் பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரை படைகள் இழந்தது புடினுக்கு பெரும் அவமானமாக பார்க்கப்படும் நிலையில், கருத்து வேறுபாடுகளை ஒடுக்கவும், தனது நாட்டின் எல்லைகளை வலுப்படுத்தவும் புதிய நடவடிக்கைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த செப்டம்பரில் உக்ரைனிடம் இருந்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளில் வசிப்பவர்களையும் பாதுகாக்க பாதுகாப்பு சேவைகளுக்கு ஜனாதிபதி புடின் அறிவுறுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனமான RIA படி, வெகுஜனக் கூட்டங்கள் மற்றும் மூலோபாய உள்கட்டமைப்பு வசதிகளை கட்டுப்படுத்த சிறப்பு சேவைகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் ரஷ்யாவிற்கு எதிராக செயல்படும் துரோகிகள் மற்றும் உளவாளிகளை கடுமையாக எதிர்கொள்வது என்றும் புடின் தெரிவித்துள்ளார்.