வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலை கடுமையாக உயர்வு

கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக காய்கறி வகைகளை குறைவாக பயிரிட்டது. இதன் காரணமாக காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளதால் காய்கறி விலை கடந்த வாரத்தை விட தற்போது விலை அதிகரித்து இருக்கிறது.

குறிப்பாக பல்லாரி வெங்காயம், தக்காளி, சாம்பார் வெங்காயம், கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கேரட் உள்பட சில காய்கறி வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.

மேலும், கோயம்பேட்டில் இருந்து திருமழிசை பகுதிக்கு காய்கறி மார்க்கெட் மாற்றியதில் இருந்து காய்கறி வகைகளை மொத்த வியாபாரிகள் இருப்பு வைப்பதில் அதிக பிரச்சினை இருப்பதும் காய்கறி விலை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வரை பல்லாரி வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்தது. தற்போதும் பல்லாரி வெங்காயம் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. ஒரு கிலோ பல்லாரி ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 வரை செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்கள் காய்கறி விலை இதேநிலை தான் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.