மகாராஷ்டிர கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி இரங்கல்

மகாராஷ்டிர மாநிலத்தில் தலைநகர் மும்பை அருகே உள்ள ராய்காட் மாவட்டம் மகாட், காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம், நேற்று மாலை 6.50 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேல் 3 மாடிகள் திடீரென இடிந்து விழ தொடங்கிய சில நிமிடங்களில் கட்டிடம் முழுவதுமாக இடிந்தது.

உள்ளூர் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அதன்பின், தேசிய பேரிடர் மீட்பு படையினர், நவீன எந்திரங்களுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை அவர்கள் சுமார் 25 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 17 பேர் காயம் அடைந்தனர். மேலும் 70 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரோடு புதைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், என் எண்ணங்கள் தங்கள் அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில், மகாராஷ்டிர விபத்தால் நான் வேதனை அடைகிறேன். இறந்தவரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த மற்றும் சிக்கியுள்ள மக்களுக்கு விரைவில் உதவி வழங்குமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் காங்கிரஸ் கட்சியினரும் கைகோர்த்துள்ளார்கள் என்று பதிவிட்டுள்ளார்.