ராணுவ பீரங்கி வாகனத்தில் வலம் வந்து வீரர்களை உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். லாங்கேவாலா ராணுவ முன்களப் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, பிரதமர் மோடி, வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தபின், அவர்களிடையே உரையாற்றினார்.

மேலும் ராணுவ பீரங்கி வாகனத்தில் நின்றபடி சிறிது தூரம் பயணித்தபோது இருபுறமும் நின்று ஆரவாரம் செய்த வீரர்களைப் பார்த்து கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடி பேசும்போது, ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் தனக்கு மன நிறைவாக இருப்பதாக கூறினார்.

வீரர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது தான் இரு மடங்கு மகிழ்ச்சி அடைவதாகவும் மோடி குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்எம் நரவனே, எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி 2014ல் பதவியேற்றதிலிருந்து, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீரிலும் உள்ள ராணுவ முன்களப் பகுதிகளில் படைவீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்.