மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை தொடர்பாக உத்தவ் தாக்கரேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக மும்பை நகரமே மூழ்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. பல வீடுகள் கனமழையால் இடிந்து சேதமடைந்தன. மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், அங்குள்ள மக்கள் கடும் அவதியடைந்தனர். தற்போது கனமழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மும்பையில் பெய்துவரும் கனமழை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே உடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தும் மும்பையின் தற்போதைய நிலவரம் குறித்தும் உத்தவ் தாக்கரேவிடம் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆலோசனையின் போது பிரதமர் மோடி, கனமழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மும்பைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்தார். அதன்பின், பிரதமரின் ஆதரவுக்கு மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் நன்றி தெரிவித்துக்கொண்டார்.