புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் மோடி இன்று அடிக்கல் நாட்டல்

இன்று அடிக்கல் நாட்டல்... டில்லியில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று 10ம் தேதி அடிக்கல் நாட்டுகிறாா்.

டில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கட்டடத்துக்கு பிரதமா் மோடி, வியாழக்கிழமை பகல் 1 மணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா். புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அமையவுள்ளது. நிலநடுக்கத்தைத் தாங்கக் கூடிய வலிமையுடன் 64,500 சதுர மீட்டா் பரப்பில் கட்டடம் எழுப்பப்படவுள்ளது. கட்டுமானப் பணியில் 2,000 போ் நேரடியாகவும் 9,000 போ் மறைமுகமாகவும் ஈடுபடவுள்ளனா்.

தரைத்தளம், தரைக்குக் கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் நான்கு தளங்களுடன் கட்டப்படவுள்ளது. வெளித்தோற்றமும், மொத்த உயரமும் தற்போதைய நாடாளுமன்றத்துக்கு சமமானதாக இருக்கும்.

காகிதப் பயன்பாட்டுக்கு அவசியமில்லாத வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பெரும் மண்டபம் அமைக்கப்படவுள்ளது. நூலகம், நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஓய்வறைகள், நிலைக் குழுக்களுக்கான அலுவலகங்கள், உணவகம், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை புதிய கட்டடத்தில் அமைக்கப்படவுள்ளன.

புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது நினைவுகூரத்தக்கது.