வரும் அக்டோபர் 1ம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைப்பு

இந்தியா: இந்தியாவில் தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனது பயனர்களுக்கு 4ஜி சேவையை வழங்கி வருகிறது. கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி சேவை வழங்குவதற்கான ஏலம் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து இந்த ஏலத்தின் முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியது. அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கான பயன்பாட்டுக்கான இந்த 5ஜி ஏலத்தின் தொகையை 20 தவணைகளாக செலுத்த மத்திய அரசு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் முதல் கட்டமாக குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதாவது டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 பெரு நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும்.

அதன்படி தற்போது தலைநகர் டெல்லியில் வரும் அக்டோபர் 1ம் தேதி (சனிக்கிழமை) பிரதமர் மோடி அவர்கள் 5ஜி சேவையை தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள மொத்த இணைப்புகளில் 3-ல் ஒரு பங்கு 5ஜி சேவையாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 2023-ன் இறுதிக்குள் நகர்ப்புற இந்தியா முழுவதும் 5ஜி சேவையை கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.