இமாச்சலில் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

அடல் சுரங்கப்பாதை திறப்பு... இமாசலில் மிக நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்தார்.

மணாலியின் தெற்கு போர்ட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பெயரிடப்பட்ட மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அடல் சுரங்கப்பாதையை திறந்துவைத்ததன் மூலம் மணாலி - லே இடையிலான பயண தூரம் 40 கிலோ மீட்டர் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோட்டங் பகுதியில் 9.02 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள சுரங்கப்பாதையால் பயண நேரம் 5 மணிநேரம் வரை குறைய வாய்ப்புள்ளது.

ஆஸ்திரிய நாட்டின் தொழில்நுட்ப அடிப்படையில் ரூ.4,000 கோடி மதிப்பில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் 10 மீட்டர் அகலத்தில் இருவழிப்பாதையாக, குதிரை லாடம் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் வரை செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை திறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாசலப்பிரதேச முதல்வர், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவானே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.