புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் பரிசீலனையில் தாமதத்தை தவிர்க்க பிரதமர் நடவடிக்கை

கனடா: பிரதமரின் அறிவிப்பு... புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் பரிசீலனையில் தாமதம், பாஸ்போர்ட்கள் மற்றும் விமான நிலைய சேவைகளில் தாமதத்தை தவிர்ப்பதற்காக, ஒரு புது அமைப்பை உருவாக்கியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

பெடரல் அமைச்சர்களைக் கொண்ட அந்த பெரிய குழு, மேற்குறிப்பிட்ட சேவைகளில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை மீளாய்வு செய்து, அந்த பிரச்சினைகளை எப்படி மேற்கொள்வது என்பதற்கான பரிந்துரைகளையும் செய்யும்.


குறிப்பாக, புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் பரிசீலனையில், எங்கு நடவடிக்கை தேவை என்பதில் அந்தக் குழு முக்கிய கவனம் செலுத்தவுள்ளது. அந்தக் குழுவின் நோக்கம், புலம்பெயர்தல் சேவைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீர் செய்ய, குறுகிய கால தீர்வுகள் மட்டுமின்றி நீண்ட கால தீர்வுகளையும் உருவாக்குவதுடன், சேவைகளை வேகப்படுத்துவதும் ஆகும்.

சமீபத்திய மாதங்களாக சேவைகளில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிவோம், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ள கனடா பிரதமர் ட்ரூடோ, இந்த சேவைகளை விரைவாக்க, அனைத்தையும் தொடர்ந்து செய்வோம் என்றும், கனேடியர்களுக்குத் தேவையான உயர் தர சேவைகளை வழங்குவதற்கான வழிமுறைகளை சிறப்பாகச் செய்வதற்கு இந்த குழு அரசுக்கு வழிகாட்ட உதவும் என்றும் கூறியுள்ளார்.