விமான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி

இலங்கை: தனியார் துறைக்கு அனுமதி... தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, விமான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறையை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு எரிபொருள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (24) அமைச்சர் மற்றும் விமான நிறுவன பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரம், கடந்த 27 ஆம் திகதி அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் நடத்திய கலந்துரையாடலில், எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான விமான எரிபொருள் சேமிப்பு பலவீனமானதால் இலங்கைக்கான சில விமான சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், விமான எரிபொருளை இறக்குமதி செய்யும் ஏகபோக உரிமை எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு இருப்பதாகவும், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தமது நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினால் அதனைச் செய்ய முடியும் என்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் அது சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் வலியுறுத்தினார்.