பிரியங்கா உத்தரபிரதேசத்தில் குடியேற வாய்ப்புள்ளதாக தகவல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அவர் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அவர் உத்தரபிரதேசத்தில் குடியேற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பிரியங்கா உத்தரபிரதேசத்தில் குடியேற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். அதன்படி, லக்னோவில் ஏற்கனவே உள்ள வீட்டில் தங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுகையில், உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ஏற்கனவே ஒரு வீட்டை பிரியங்கா வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். இரவு நேரம் தங்கும்வகையில் லக்னோவுக்கு வரும்போதெல்லாம் அவர் அந்த வீட்டில்தான் தங்குவார். கடந்த ஓராண்டில் பலதடவை தங்கி உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், டெல்லியில் வேறு வீட்டுக்கு மாறுவதை விட 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி, உத்தரபிரதேசத்தில் காங்கிரசை பலப்படுத்தும் நோக்கத்தில் அவர் லக்னோவில் குடியேறலாம் என்று தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் உத்தரபிரதேசத்திற்கு குடியேறினால் லக்னோவில் உள்ள வீட்டில் வாசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.