மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர்: மின் உற்பத்தி நிறுத்தம்... மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் உற்பத்தி நிறுத்தத்திற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தரப்படவில்லை.


மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் இரண்டாவது பிரிவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. முதல் பிரிவில் ஏற்கனவே 1 ஆவது 3 ஆவது மற்றும் 4 ஆவது அலகுகளில் பல்வேறு காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. சனிக்கிழமை மாலை வரை முதல் பிரிவில் இரண்டாவது அலகில் மட்டும் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை முதல் பிரிவில் உள்ள 2 ஆவது அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று அங்குள்ள தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.