நைஜீரியாவில் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்

நைஜீரியாவில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் மீது போலீசாரின் அத்துமீறிய தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. போலீசாரின் இந்த கொடூர தாக்குதல்கள் காரணமாக, பலர் காயமடைந்தும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்நிலையில் போலீசாரின் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்நாட்டின் மிகப்பெரிய நகரான லகோஷின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ஆனால், போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக லகோஷ் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இந்த மோதலின்போது பாதுகாப்பு படையினர், போலீசார் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் போராட்டக்காரர்களில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.