சென்னையில் ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்த தடை நீட்டிப்பு

சென்னையில் ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்தவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஆர்ப்பாட்டம், கூட்டங்கள் நடத்தவும் தடை நீடிப்பதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்துக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

கடந்த மாதம் அளித்த தளர்வுகளில் திரையரங்கங்கள் திறக்கப்பட்டன. அதற்கு முன்பு வணிக வளாகங்கள், வழிபாட்டு தளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த மாதம் 14ஆம் தேதி முதல் கடற்கறைக்கு செல்லலாம் என தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கான தடையை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

அதனால் டிசம்பர் 15ஆம் தேதி வரை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தக்கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.