மொரீஷியஸ் நாட்டின் கடல்பரப்பில் ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்தை குற்றஞ்சாட்டி பொதுமக்கள் போராட்டம்

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான வகாஹியோ என்ற எண்ணெய் கப்பல் கடந்த மாதம் 25-ஆம் தேதி, இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் அருகே பவளப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கப்பலில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரம் டன் டீசல் மற்றும் எண்ணெய் கடலில் கலந்தது.

இதன் காரணமாக மொரீஷியஸ் தீவுப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. எனவே டன் கணக்கில் கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து மொரீஷியஸ் தீவுப்பகுதியில் உள்ள கடல் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மொரீஷியஸ் தீவுகள் பெரும் இழப்பை சந்திக்கவுள்ளது.

இந்நிலையில் விபத்து நடைபெற்ற மொரீஷியஸ் தீவுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மொத்தமாக 34 டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீவுப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கப்பல் விபத்து காரணமாகத்தான் டால்பின்கள் உயிரிழந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். 2 டால்பின்கள் காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற டால்பின்கள் எவ்வாறு உயிரிழந்தன என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் நேற்று திரண்ட ஆயிரக்கணக்கானோர் எண்ணெய் கப்பல் விபத்தை கையாள்வதில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 75 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தற்போது, எண்ணெய் கப்பல் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.