இலங்கையில் தொடர் எரிபொருள் தட்டுப்பாட்டால்.... பொது போக்குவரத்து மிக கடுமையாக பாதித்து

கொழும்பு : இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக நீடித்து வரும் இந்த பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் உச்சமடைந்து கொண்டே வருகிறது. கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல்-டீசல் அனுப்பி வருகின்றன. ஆனாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இலங்கை தத்தளித்து வருகிறது.

அங்கு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவுக்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் அவல நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு காத்திருப்போர் அவ்வப்போது உயிரிழக்கும் சூழலும் நிலவுகிறது.

அந்தவகையில் தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதியான பனதுராவில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட நேரம் காத்திருந்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கொழும்புவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்கு இந்த ஆண்டு தொடக்கம் முதலே இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்து வருவதால் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தி வருகிறது. பல மாதங்களாக நீடித்து வரும் இந்த எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காணாத அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
குறிப்பாக நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இலங்கையின் எரிபொருள் தட்டுப்பாடு பொது போக்குவரத்தையும் மிக கடுமையாக பாதித்து இருக்கிறது. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவித்து இருக்கிறது.

இதைப்போல அன்னிய செலாவணி பற்றாக்குறையால் ரெயில் என்ஜின்களுக்கான எரிபொருள் இறக்குமதிக்கு பணம் இல்லாததால், விரைவில் ரெயில் சேவையும் பாதிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் பொருளாதார நெருக்கடியால் உணவு, மருந்து, சமையல் கியாஸ் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி தீப்பெட்டிகளுக்கு கூட இலங்கையில் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மக்களின் துயரம் நாளுக்கு நாள் மிக அதிகரித்து வருவதாக அதிர்ச்சி ஒன்று தகவல்கள் வெளியாகி உள்ளன.