பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது

புதுடில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது. 2022ஆம் ஆண்டிற்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை கடந்த ஜூலை மாதம் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை ஆறு கட்டங்களாக நடத்தியது.

இந்தியாவில் 259 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே ஒன்பது நகரங்களிலும் என 489 மையங்களில் கியூட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 60 சதவிகித மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.

தேர்வு முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை இரவு பத்து மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகப்புப் பக்கத்தில் 'CUET UG 2022 முடிவுகள்' என்ற இணைப்பைக் கிளிக் செய்து தேர்வாளர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.