இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்த கத்தார் நீதிமன்றம்

கத்தார்: இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ள கத்தார் நீதிமன்றம்.

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையைச் சேர்ந்த எட்டு முன்னாள் அதிகாரிகளுக்குத் தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகள் அளிக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர் பணியாற்றி வந்தனர்.

ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வந்த நிலையில், இந்தியர்கள் 8 பேரும் கத்தார் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 8 பேர் மீதான வழக்கு விசாரணை கத்தார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று 8 பேருக்கும் மரணதண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.