இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தகவல்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி 95 சதவீதம் வெற்றி அடைந்து விட்டதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு 94 வயதாகிறது. அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கு 99 வயதாகிறது. இந்நிலையில் இருவருக்கும் வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை இங்கிலாந்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசியின் 8 லட்சம் ‘டோஸ்’, அடுத்த வாரம் இங்கிலாந்து வந்து சேரும் என அதன் மந்திரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசிகள் வந்ததும், நாளை முதல் அதிக முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு 50 ஆஸ்பத்திரி மையங்களில் தடுப்பூசி போடப்படும் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசியை பெற பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டு வருகின்றன.