உத்தரபிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல் மற்றும் பிரியங்கா விடுதலை

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 19வயது பெண், உயர் வகுப்பை சேர்ந்த 4 வாலிபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டனர். அப்போது அவர்களது வாகனத்தை நொய்டாவில் உள்ள கவுத்தம புத்தா நகர் மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் நடந்து சென்றனர். அப்போது போலீசார் தடுக்க முயற்சி செய்தபோது ராகுல் காந்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் கட்சி ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஹத்ராஸ் மாவட்டம் நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதனால், கட்சி ஆதரவாளர்களுடன் சேர்த்து ராகுல், பிரியங்காவை கவுத்தம புத்தா நகர போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராகுல் மற்றும் பிரியங்காவை அங்குள்ள விருந்தினர் மாளிகைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரம் வைத்திருந்த அவர்கள், பின்னர் இருவரையும் விடுவித்தனர். அவர்களை உத்தரபிரதேச போலீசார் மீண்டும் டெல்லிக்கே திருப்பி அனுப்பினர். தடையை மீறி பேரணியாக வந்ததாக கூறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 200-க்கும் அதிகமான காங்கிரஸ் கட்சியினர் மீது கவுத்தம புத்தா நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.