ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசம்


சென்னை: கடந்த ஜூலை 20 -ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரானது, நாளை மறுநாள்வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக நடைபெறவில்லை. மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட வண்ணமே உள்ளன.. இதன் இடையே எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதனை அடுத்து இத்தீர்மானத்தின் மீது 2-வது நாளாக இன்றும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. உரையாற்றினார். தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் மக்களவைக்குள் வர அனுமதித்ததற்காக சபாநாயகருக்கு நன்றி. பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் சிறை செல்லவும் தயார். பாஜக ஆட்சியில் நான் துன்புறுத்தப்படுகிறேன். அதானி பற்றி பேசினால் பாஜகவினர் எரிச்சலடைகின்றனர். அதானியை பற்றி இன்று பேச மாட்டேன், பாஜக உறுப்பினர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக என்னை அவதூறாக விமர்சித்து கொண்டு வருகிறது. இதயத்தின் ஆழத்திலிருந்து பேசுகிறேன், ஒற்றுமை யாத்திரை இன்னமும் முடியவில்லை. இந்திய ஒற்றுமை பயணத்துக்காக எதையும் தியாகம் செய்ய தயார். மக்களை சந்திப்பதற்காகவே ஒற்றுமை பயணம் மேற்கொள்கிறேன். குமரி முதல் இமயம் வரையிலான தனது ஒற்றுமை நடைபயணம் இன்னும் முடியவில்லை. ஒற்றுமை பயணத்தின்போது மக்கள் எனக்கு ஏராளமான உதவிகளை செய்தனர். இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு பிறகு எனது மனதிலிருந்து ஆணவம் அகற்றப்பட்டது. பாஜக ஆட்சியால் நான் 10 ஆண்டுகளாக அவதூறுகளுக்கும் சிறுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகிறேன்.

நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது.மணிப்பூரில் நமது தேசமான இந்தியாவை கொன்று விட்டீர்கள்” எ ராகுல் காந்தி பேசினார். அவர் உரையை தொடங்கியது முதலே பாஜக அமைச்சர் கிரண் ரிஜிஜுவுடன் இணைந்து பாஜக எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நாளை பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.