முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு; அரசு கடமையை செய்வதாக ஓ.பி.எஸ். தகவல்

சென்னை: அரசு கடமையை செய்கிறது... அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு அரசு கடமையைச் செய்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

பெரியாரின் 144-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக அவரது ஆதரவாளர்கள் பெரியாரின் உருவப்படத்தை சிலைக்கு கீழே வைத்து அலங்கரித்திருந்தனர்.

இபிஎஸ், மரியாதை செலுத்திய உடனே பெரியார் படத்தை கையோடு எடுத்துச் சென்றனர். இதனால் அடுத்ததாக ஓபிஎஸ் மரியாதை செலுத்த வந்தபோது பெரியார் படம் இல்லாததால் அவரது ஆதரவாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்தார். அப்போது அவர்கள் கொண்டு வந்து வைத்த பெரியாரின் உருவப்படத்திற்கு ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், பெரியாரின் கொள்கைகள் தமிழ்நாட்டில் ஆலமரமாக வளர்ந்துள்ளது. எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்துடன் அதிமுகவை துவக்கினாரோ அதனை ஜெயலலிதா வளர்த்தாரோ, அதன் அடிப்படை எப்போதும் சிதையாமல் காப்பதே தங்களைப் போன்ற தொண்டர்களின் கடமை என தெரிவித்தார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசு கடமையை செய்கிறது எனவும் நிரூபிக்க வேண்டிய கடமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் பொறுப்பு எனவும் கூறினார்.