ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நகர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் வாருகாலில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீரும், கழிவுநீரும் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க மிகவும் சிரமம் அடைந்தனர்.

மேலும் அனந்தலை ஆற்று பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. முடங்கிய சாலையில் பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே உள்ள குழிகளில் மழைநீர் தேங்கியது.

மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது 15 அடி உயரத்திற்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வழங்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.