மீனவர்கள் பத்திரமாக மீட்கப்படும் வரை ராமேசுவர மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 29 பேரையும், நான்கு விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர் சங்கத்தினரும் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா எமரிட், சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தைச் சேர்ந்த நான்கு விசைப்படகுகளையும் 29 மீனவர்களையும் உடனடியாக மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீனவர்கள் பத்திரமாக மீட்கப்படும் வரையிலும் இன்று முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே நேரம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சிறிய விசைப்படகுகள் கலந்து கொள்ளாது எனவும், ராமேசுவரத்தில் உள்ள சிறிய விசைப்படகுகள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லும் என்றும் மீனவ சங்க தலைவர் போஸ் தெரிவித்துள்ளார்.