வண்ணத்துப்பூச்சி பூங்காவில் முகாமிட்டுள்ள அரியவகை பறவைகள்

ஏராளமான அரிய பறவை இனங்கள் திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் முகாமிட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் வசிக்கும் கறுப்பு நாரை, மர ஆந்தை, நீலராத்ரஸ் போன்ற பல்வேறு பறவையினங்கள் உள்ளன. இதுவரை இது போன்ற 94 பறவை இனங்கள் இங்கு வசிப்பது கண்டறியப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சமீபத்திய வரவாக கறுப்பு நாப்ட் மோனார்க் பறவைகள் இடம் பெற்றுள்ளன. இந்த வகை பறவைகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பசுமையான சூழலில் மட்டுமே வசிக்கும். இவை தற்போது வண்ணத்து பூச்சி பூங்காவிற்கு வருகை தந்துள்ளதாக வண்ணத்துப்பூச்சி பூங்காவின் இளநிலை ஆராய்ச்சியாளர் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, இந்த வகை பறவைகள் பசுமையான சூழலில் மட்டுமே வாழ்கிறது. இதனை தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அதன் கழுத்து பகுதியை வைத்து அடையாளம் காண முடிந்தது.

இங்கு ஊர்வனவற்றுக்கு வண்ணத்துப்பூச்சிகளும், பறவை இனங்களுக்கு பழவகைகளும் உணவாக கிடைக்கிறது. மேலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு பகுதியில் வண்ணத்துப்பூச்சி உள்ளதால் பறவைகள் அங்கு சென்று திரும்புகின்றன என்றார்.