தமிழகத்தில் மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 40 ஆக குறைப்பு

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்றது.

அந்த வகையில் ஏப்ரல் மாதம் 22ம் தேதி அன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மக்களின் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் ஒன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதில், மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெரும் வயதை 50 லிருந்து 40ஆக குறைப்பது குறித்த அறிவிப்புகள் வெளியானது. அதாவது, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் வயது 50 லிருந்து 40 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பான அரசாணை ஒன்று தற்சமயம் வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி உலமாக்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 40 ஆக குறைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி உலமாக்கள் பயனடைய இருக்கின்றனர். இப்போது தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.