பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

தண்ணீர் திறப்பு குறைப்பு... பூண்டி ஏரிக்கான முக்கிய ஆதாரமான கால்வாய்களில் நீர் வரத்து குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை 1800 கனஅடியாக நீர் திறப்பு குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஏரிக்கு கண்டலேறு அணையிலிருந்தும், வரத்துக் கால்வாய் மூலமும் தற்போது நொடிக்கு 2,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், காலை நிலவரப்படி 33.92 அடியை எட்டிய நிலையில், 2800 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. அதேபோல், புழல் ஏரியில் நீர் வரத்து 2,792 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.

எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 2 நாள்களுக்கு முன்பு பொதுப்பணித் துறையால் 4 மதகுகள் என்பது 6 மதகுகள் வழியாக தலா 1000 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் வரத்துக்கால்வாய்களில் மழை குறைந்ததால் நீர் வரத்தும் 6 ஆயிரம் கனஅடியிலிருந்து 2 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இந்த ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தற்போதைய நிலவரப்படி, 2,800 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்புடன் 34 அடியை நெருங்கி வருகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு என்பது குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கண்டலேறு அணை, அம்மம்பள்ளி அணை மற்றும் நீர் வரத்து கால்வாய்களில் மழை பொழிவு ஏற்பட்டால் நீர் வரத்து அதிகரிக்கும். அப்போது, உபரி நீரும் கூடுதலாக திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.