மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

மேட்டூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அங்கிருந்து திறக்கப்பட்ட நீர், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,385 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி 5,140 கனஅடியாக சரிந்தது.

இதனை அடுத்து அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 8-ம் தேதி இரவு 8 மணி முதல் விநாடிக்கு 7,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 6,000 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

அணை நீர்மட்டம் 55.54 அடியாகவும், நீர் இருப்பு 21.47 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்மட்டம் சரிவதால், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.