மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 14 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவு, பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகமாகவும், குறைவாகவும் திறக்கப்படுகிறது. கடந்த 12-ந் தேதி வரை டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனிடையே டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்தது.

இதையடுத்து கடந்த 13-ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு சில நாட்களில் டெல்டா பாசன பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதனால் கடந்த 17-ந் தேதி முதல் அணையிலிருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், நேற்று மதியம் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 18 ஆயிரம் கன அடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 525 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 98.15 அடியாக இருந்தது.