தமிழக பள்ளிகளுக்கு (2022 – 2023ம்) நடப்பு கல்வியாண்டுக்கான நாட்காட்டி வெளியீடு

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கப்படவில்லை. தற்போது இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தாமதமாக கல்வியாண்டு தொடங்கப்பட்டது.

அதனால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை நடத்தி முடிக்க சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டது. இது ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நடப்பு கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி தற்போது முதற்கட்டமாக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 2022 – 2023ம் கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. அதே போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை, வார விடுமுறை 148 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக செயல்படும் என்றும் இதர பணிகளுக்கு கூடுதலாக 7 நாட்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல், இரண்டாம், மூன்றாம் பருவத்தேர்வு குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெற்றுள்ளது. அதே போல 2022 – 2023ம் ஆண்டில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 29 முதல் மே 31 வரை என மொத்தம் 33 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.