ஏற்கனவே திருமணமான பெண்ணுக்கு மீண்டும் திருமணம்; கணவரின் புகாரால் தடுத்து நிறுத்திய போலீசார்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் பெங்களூரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த போது பெங்களூருவில் என்ஜினீயராக பணிபுரிந்த தர்மபுரியை சேர்ந்த 27 வயது வாலிபருடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குள்ளும் நுழைந்தனர். இந்த திருமணம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியாது. 5 மாதமாக இல்லற வாழ்க்கையை சந்தோசமாக நடத்திய ஜோடிக்கு கொரோனா ஊரடங்கு வேட்டு வைத்தது.

கொரோனா ஊரடங்குக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அந்த பெண் மீண்டும் பெங்களூருக்கு செல்வதில் இடைஞ்சல் ஏற்பட்டது. பெற்றோர் வீட்டிலேயே இருந்து விட்டார். வந்த இடத்தில் பெண்ணுக்கு திருமண வரன் பார்க்க தொடங்கிய பெற்றோர், நித்திரவிளை பகுதியை சேர்ந்த வாலிபரை மணமுடிக்க ஏற்பாடு நடந்தது.

பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி அந்த பெண்ணும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார். நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு, திருமணத்தை எந்த தேதியில் நடத்தலாம் என்பதும் முடிவு செய்யப்பட்டது. தடபுடலாக இருவீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்தனர்.

திருமணத்தை நேற்றும், வரவேற்பை அதற்கு முந்தைய நாளும் நடைபெறுவதாக பத்திரிகை அடித்து இருவீட்டாரும் உறவினர்களுக்கு கொடுத்தனர். அதன்படி திருமண வரவேற்பு நேற்றுமுன்தினம் மார்த்தாண்டத்தில் நடந்தது.

இந்தநிலையில் திருமண வரவேற்பு நடந்த இடத்துக்கு மார்த்தாண்டம் போலீசார் விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் இருவீட்டாரும் பதட்டம் அடைந்தனர். அப்போது, மணமகளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாகவும், அவருடைய கணவர் போலீஸ் நிலையம் வந்து புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு மணமகன் அதிர்ச்சி அடைந்தார். இதனால் கலகலப்பாக இருந்த வரவேற்பு நிகழ்ச்சி, பிறகு களை இழந்த நிலைக்கு சென்றது. ஒரு பெண், தன்னை இப்படி ஏமாற்றி விட்டாரே என்று சோகமான நிலைக்கு மணமகனும் சென்றார்.

தொடர்ந்து மணமகளை போலீஸ் நிலையம் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ரகசிய திருமணம் செய்த விவரத்தை மணமகள் ஒப்பு கொண்டார். பிறகு போலீசார் அவருடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.