உயர் நீதிமன்ற வளாக தீவிபத்து குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை

வெளிப்படையான விசாரணை நடத்த கோரிக்கை... உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குறிப்பாக இந்த கட்டிடம் நாட்டின் நீதித்துறை அமைப்பின் உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ளது என்பதையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நீதிமன்ற நடவடிக்கைகள் அவசர வழக்குகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீவிபத்திற்கு காரணம் என்ன என்பதை அரசாங்கம் கண்டறிய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு எந்தக் ஆவணங்களும் காணாமல் போயுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வளாகத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 2019 ஆம் ஆண்டில் ஆட்சியை ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் தொடங்கப்பட்ட நீதிமன்ற பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளது.