அபிவிருத்தியை உயர்த்த சிவில் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்

சிவில் சமூகம் ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை... சமகால நிலைமைக்கேற்ப மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியினையும், பொருளாதாரத்தினையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மாவட்ட நிர்வாகத்தினைக் கொண்டு செல்ல சிவில் சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டப் புதிய அரசாங்க அதிபர் க. கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்புச் சிவில் சமூகத்தினருக்கும், மாவட்ட அரசாங்க அதிபருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை(24) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது மாவட்டத்தின் சமகால நிலைமை, அபிவிருத்தி மற்றும் எதிர்காலத் நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுப் பரவலினைக் கட்டுப்படுத்தி மாவட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், இப் பிரதேசத்தில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகளுக்கு உளவளத்துணைச் செயற்பாடுகள் வழங்கப்பட்டு இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் சிவில் சமுகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் இம் மாவட்டத்தில் காணப்படும் விவசாயம், விலங்கு விவசாயம் மற்றும் பால் பண்ணை உற்பத்திக்குத் தேவையான நீரினை வழங்கும் தூர்ந்து போயுள்ள குளங்களைப் புனருத்தாரணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட எல்லைப் பிரச்சினைகளான களுவாஞ்சிக்குடி எல்லைப் பிரச்சினை, மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் காணப்படவேண்டுமெனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இது தவிர மட்டக்களப்பு நகர்ப் பகுதிகளில் நடைபாதைகளில் வாகனங்கள் தரித்து நிற்பதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாநகர சபையுடன் இணைந்து தீர்வு காணப்பட வேண்டியதுடன், மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளுக்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

சிவில் சமுக அமைப்பின் இக் கருத்துக்களை உள்வாங்கிய அரசாங்க அதிபர் கருணாகரன் சமகால நிலைமைகளுக்கேற்ப மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் தேவையான நடவடிக்கைகளை தமது நிர்வாகத்தினூடாக முன்னெடுப்பதற்குச் சிவில் சமுகத்தின் ஒத்துழைப்புக்கள் தேவை எனக் கோரிக்கை விடுத்தார்.

மேற்படி சந்திப்பில் மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. நவேஸ்வரன், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்புச் சிவில் சமுக அமைப்பின் தலைவர் கே.எஸ். மாமாங்கராஜா, முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் எஸ். அருணகிரிநாதன் உட்படச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.