பாசன கிணற்றில் விழுந்து தத்தளித்த மயில் உயிருடன் மீட்பு

உடுமலை: கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்த மயில் மீட்பு... 60அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் தீயணைப்புத் துறை வீரர்கள் ஒப்படைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலையாண்டிபட்டினத்தில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பாசன கிணறு உள்ளது. இதில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் மின்மோட்டார் வைத்து எடுக்கப்படுகிறது. அந்த வகையில் நடராஜன் கிணற்று மோட்டாரை இயக்கச் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் உயிருடன் மயில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகில் உள்ளவர்களின் உதவியுடன் உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி மயிலை பத்திரமாக மீட்டனர்.
மேலும் மயிலின் உடம்பில் காயம் இருந்தால் உடன் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மயிலை பாதுகாப்பாக வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு மயிலை உயிருடன் மீட்ட மீட்புக்குழுவினருக்கு பொதுக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.