செயற்கை மழை எனப்படும் மேக விதைப்பு முறை குறித்த ஆராய்ச்சி வெற்றி

கான்பூர்: செயற்கை மழை வெற்றி...மேகங்கள் மீது ரசாயனங்களை தூவி ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக செயற்கை மழையை உருவாக்கி உள்ளனர்.

6 ஆண்டு தீவிரமான முயற்சிக்குப் பிறகு இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதற்காக ஐஐடி கான்பூரின் விமான ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட செஸ்னா விமானம் 5 ஆயிரம் அடி உயரத்திற்கு சென்று ரசாயனப் பொடியை மேகங்கள் மீது தூவியது.

சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது.

சில்வர் ஐயோடைட், பொட்டாஷியம் ஐயோடைட் போன்ற ரசாயன துகள்கள் மேகத்தின் மீது தூவப்படும் போது, மேகத்தில் அதீத குளிர்ச்சி உண்டாகி மழைப் பொழிவு ஏற்படுகிறது.

இதில் ரசாயனங்கள் தூவப்படும் அளவை பொறுத்தும், காற்றின் வேகத்தை பொறுத்தும் மழை அளவு தீர்மானிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே சீனா உருவாக்கிவிட்டது.

ஆனால் அதை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளாததால், மேக விதைப்பு முறை குறித்த ஆராய்ச்சி பொறுப்பை ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் ஏற்று தற்போது வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளனர்.