திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரிஉபரிநீர் வடிகால் திட்டம்...முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்தும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.

இன்று காலை 9.30 மணியளவில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த கலெக்டர் அலுவலக கூட்ட அரங்குக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். ஆய்வு கூட்டத்துக்கு முன்பாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

கொரோனா தொற்றால் நாம் சோதனையான காலத்தில் இருக்கிறோம். இருப்பினும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததின் பயனாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. இறப்பின் விகிதம் குறைந்துள்ளது. மக்கள் அரசு சொல்லும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினாலே தமிழகம் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விடும்.

திருவாரூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி இடையே ரூ.336 கோடியில் இருவழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 14 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 70 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1300 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

காவிரியில் அபரிமித உபரிநீர் திறக்கப்படும்போது அது கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரிஉபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடைமடை வரை வடிகால் வசதிகளை சிறப்புற ஏற்படுத்தி காவிரியில் வரும் அபரிமித உபரிநீரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்துக்காக கொண்டு செல்ல இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு எப்போதும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் பாதுகாப்புக்காகவே பல்வேறு திட்டங்களை எப்போதும் செயல்படுத்தி வருகிறது.

இதையடுத்து இன்று மதியம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ரூ.38.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். பின்னர் ரூ.71.27 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சி முடிந்ததும் மாலை தஞ்சையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.