அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.41.9 கோடி வைப்பு தொகை பறிமுதல்?

சென்னை: அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை நடத்திய அதிரடி ரெய்டில், ரூ.41.9 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்ட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தோனேஷிய நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அனுப்பப்பட்டதாகவும், வைப்புத்தொகை தவிர ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடந்து வருவதாகவும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

முன்னதாக, சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை மேற்கொண்ட 'ரெய்டு' நடவடிக்கையில், அடுத்ததாக அமைச்சர் பொன்முடி சிக்கியுள்ளார். அவருக்கும், அவரது மகன் கவுதம சிகாமணிக்கும் சொந்தமான வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

அதன் அடிப்படையில், 'சம்மன்' வழங்கப்பட்டு, பொன்முடியை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.