விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, ஜனாதிபதியை சந்திக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் தொடர்ந்து 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு 8-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திக்க உள்ளார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறுகையில், கட்சி தலைவர் சரத்பவார் வரும் 9-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த செப்டம்பரில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது விவசாய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சரத்பவார் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.