இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள சவுதி அரேபியா அனுமதி

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எகிப்து, ஜோர்டானும் ஆகிய நாடுகள் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்து அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்நிலையில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. இதனால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது.

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமானப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இரு நாடுகள் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே கடந்த மாதம் 14 ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை சற்று தணிந்துள்ளது. மேலும்,ராஜாங்க, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த விமானம் சவுதி அரேபியாவில் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றது. இதற்கு முன், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த எந்த ஒரு விமானமும் சவுதி வான் எல்லையை பயன்படுத்த பல ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது. சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியது அதுவே முதல் முறையாகும். தற்போது, இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விமானப்போக்குவரத்துக்கு தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்திக்கொள்ள சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.