தமிழக பள்ளி மாணவர்களுக்கு முழு பாடத்திட்டங்களும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் நடத்தப்பட்டன. இதனையடுத்து ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததுமே மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டன.

மேலும், 2 ஆண்டுகளுக்கு பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் நடக்கமுடியாத காரணத்தினால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் சில குறைக்கப்பட்டன.

அதாவது, 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் வரையிலும் பாடங்கள் குறைக்கப்பட்டன. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 38சதவீதம் வரைக்கும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 39 சதவீதம் வரைக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதம் வரைக்கும் பாடங்கள் குறைக்கப்பட்டன.

குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகளும் கேட்கப்பட்டன. இதனால் மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி பொதுத்தேர்வை எழுதினர். கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 13 ஆம் தேதி தான் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளும் துவங்கப்பட்டன.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், இந்த ஆண்டுகளில் பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பாடத்திட்டங்கள் இந்தாண்டில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.