2020 சதுர அடியில் காபி தூளால் காந்தியின் படத்தை வரைந்த பள்ளி ஆசிரியர்

பள்ளி ஆசிரியரின் அசத்தல் சாதனை... இந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் ஆசிரியர் மகாத்மா காந்தியின் உருவப் படத்தை 2020 சதுர அடி பரப்பளவில் காபி தூள் மூலம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இந்துஸ்தான் குழுமத்தின் அங்கமான கிண்டி, இந்துஸ்தான் சர்வதேச பள்ளி, திறமைகளை வளர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது. இங்கு கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக பல்வேறு கடைகளிலிருந்து காலாவதியான காபி தூள் சேகரிக்கப்பட்டது.

அது தகுந்த அளவு தண்ணீருடன் கலந்து படம் வரைய தேவையான பதத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த காபி கலவையைக் கொண்டு, இந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் ஓவிய ஆசிரியர் ஆர்.சீனிவாசன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். இடைவிடாமல் கண்காணிப்பு கேமராக்கள் இயங்க, ஓவிய ஆசிரியர் சீனிவாசன் 2020 சதுர அடி பரப்பளவில் மகாத்மா காந்தி படத்தை 22 மணி 50 நிமிடங்களில் உருவாக்கினார்.

இதன் மூலம் ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட இரு உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதாவது கிரீஸ் நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி 158.37 சதுர மீட்டர் (1,704 சதுர அடி) பரப்பளவிலும், ஆந்திராவில் 158.5 சதுர மீட்டர் (1706 சதுர அடி) பரப்பளவிலான ஓவியம் 33 மணி நேரத்திலும் வரையப்பட்டுள்ளன. இந்த இரண்டும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளன.