தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது; அமைச்சர் கேஏ செங்கோட்டையன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு முதியோர் உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் அவர் பள்ளி திறப்பது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது. இது குறித்து எந்த தகவலும் வரவில்லை. வந்தால் தகவல் தெரிவிக்கிறேன்.

தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ- மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

கடந்த ஆண்டை விட அதிக மாணவ- மாணவிகள் தற்போது அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த மாதம் கடைசி வரை நடைபெறும். பெற்றோர்கள் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க படையெடுத்து வருகிறார்கள்.

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அரசின் கொள்கை முடிவு. நாளை 238 மையத்தில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதனை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் எழுதுகிறார்கள். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.