குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிப்.18 கோவைக்கு வருகை தரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் தமிழகம் வரவுள்ளார். பிப்.18-ம் தேதி வருகை புரியும் அவர் முற்பகல் கோவிலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதை தொடர்ந்து அவர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து கோவைக்கு புறப்படவுள்ளார். அங்கு வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவரது வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தலைவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் கோவையில் வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பின் குடியரசுத்தலைவர் சூலூர் விமானப்படை தளம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படவுள்ளார்.