இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார், 2 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக திமுக பிரமுகர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில் வேதாரண்யம் அருகே குரவபுலம் ரயில்வே கேட்டு அருகில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அகஸ்தியன்பள்ளியைச் சேர்ந்த ரவி, கோடியக்காட்டைசேர்ந்த திமுக பிரமுகர் லட்சுமணன், தேத்தாகுடி தெற்கு பகுதி சேர்ந்த ரவி மற்றும் வேதமணி, பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த குமார், மதுரையைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் ஆகியோரை நாகை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 300 கிலோ கஞ்சா மற்றும் கார், 2 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கஞ்சா கோடியக்கரை புஷ்பவனம் ஆறுகாட்டுத்துறை மணியின் தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது என்பது தெரிய வந்துள்ளது. இந்த கஞ்சாவின் இந்திய மதிப்பு சுமார் ரூ. 60 லட்சம் என கூறப்படுகிறது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 பேரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டனர்.