சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

துபாயிலிருந்து சிறப்பு விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த முகமது வர்கீஸ்(வயது 25), முகமது யாசிர் கான்(23), முஜிபுர் ரகுமான்(34), பிலால்(33), மதன்குமார்(24), சையத் முகமது(30), அசோக்குமார்(32), பசில் ரகுமான்(27), முகமது ரபீக்(21) ஆகிய ஒன்பது பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் கைக்கடிகாரம், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவர்கள் ஐபோன், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்துணவு பொருட்களையும் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து ஒன்பது பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 800 கிராம் தங்கம், ரூ.19 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், சிகரெட்டுகள், உடற்பயிற்சிக்கான சத்துணவு பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சென்னையிலிருந்து துபாய்க்கு சென்ற சிறப்பு விமானத்தில் செல்ல வந்த சிவகங்கையை சேர்ந்த ரசூலுதீன்(29) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கைப்பையில் உள்ள ரகசிய அறைக்குள் இங்கிலாந்து பவுண்டு மற்றும் சிங்கப்பூர் டாலர்களை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் பத்து பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், உடற்பயிற்சிக்கான சத்துணவு பொருட்கள், சிகரெட்டுகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பத்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.