செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு விசாரணை

சென்னை: மூத்த வழக்கறிஞர் கேள்வி... அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடும் போது, ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள செந்தில் பாலாஜி துறை இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன், தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுவதை சுட்டிக்காட்டி, ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள செந்தில் பாலாஜி துறை இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 2 ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம். எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு அடைகிறார் என்று கேட்டார்.

சட்டமன்ற உறுப்பினராக சம்பளம் பெறுவதற்கு எதிர்க்காத மனுதரார் அமைச்சராக சம்பளம் பெறுவதற்கு ஏன் எதிர்க்கின்றார் என்றும் அவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் போன்றவர்கள் கைதான போது அமைச்சர்களாக நீடிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்று வழக்கு வந்திருப்பது இதுவே தான் முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார். எம்.எல். ரவி தரப்பு வழக்கறிஞர், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கும், அதை நிறுத்தி வைத்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் செந்தில் பாலாஜி பதவியில் இல்லை என்று வாதிட்டார்.

அதன் பின் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞரின் பதில் வாதத்துக்காக வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.