ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏழு தேசியப்பட்டியல் ஆசனங்கள்

ஏழு தேசியப்பட்டியல் ஆசனங்கள்... நடந்து முடிந்துள்ள 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏழு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படாது என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நாட்டில் பாரிய அரசியல் ஜனநாயகப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நாடாளுமன்றில் 54 ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்த 27 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தேசியப் பட்டியல் தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்போதவதில்லை என கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது. எனவே, பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியலில் வாய்ப்பளிக்கப்படாது. இதேவேளை, தற்போது நாட்டில் பாரிய அரசியல் ஜனநாயகப் புரட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.