ஈரானின் கப்பல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ஏழு கப்பல்கள் சேதம்

ஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புஷர் துறைமுகம், பிரமாண்டமான கப்பல் கட்டும் தளம் உள்ளது. இந்நிலையில் இன்று அங்குள்ள கப்பல் கட்டும் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக அங்கிருந்த ஏழு கப்பல்கள் சேதடைந்தன.

பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அந்த பகுதி கரும்புகையாக காட்சியளித்தது. ஈரானில் கடந்த ஒரு மாதமாக முக்கியமான இடங்களில் குண்டு வெடிப்பு அல்லது தீ விபத்து போன்றவை நடக்கின்றன. இதன் காரணமாக ராணுவம், அணுசக்தி நிலையம், தொழில்துறை இடங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் சைபர் நாசவேலை என ஈரானின் அதிகாரிகள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி, ஈரானில் நடக்கும் மர்மமான ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நாங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

ஈரானில் ஜூலை 2-ந்தேதி அணுசக்தி நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதன்பின், ஜூன் 30-ந்தேதி மெடிக்கல் கிளினிக்கில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். அதன்பின், ஜூலை 26-ந்தேதி பார்சின் ராணுவம் மற்றும் ஆயுதம் தயாரிக்கும் தளத்தில் விபத்து ஏற்பட்டது.