பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள், படகுகள்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மும்பை துறைமுகம் செல்வதற்காக இரண்டு கப்பல்கள் வந்தன. பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் அந்த கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் பாம்பன் ரயில்வே தூக்குப்பாலம் நேற்று பகல் 12.00 மணி அளவில் திறக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி இருந்த இரண்டு கப்பல்களும் துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் ஒன்றன்பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை கடந்து மும்பை நோக்கி சென்றன.

அப்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் வரிசையாக தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.

இழுவை கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.